யார் நல்ல வியாபாரி?
தன்னிடம் உள்ள பொருளை விற்பவனும்,தன்னுடைய அறிவை விற்பவனும்,தன்னுடைய கண்டுபிடிப்புகளை விற்பவனும் மட்டுமே நல்ல வியாபாரிகள்.ஆனால் அதையும் தாண்டி தன்னுடைய மக்கள் செல்வாக்கை விற்பவர்களை என்னவென்று சொல்ல முடியும்.
அப்படித்தான் திமுக இன்று நடந்து கொண்டு இருக்கிறது,முதலில் சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை திமுக எதிர்க்கும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது,இரண்டு கட்ட பேச்சு வார்த்தைக்கு (பேரத்திற்கு) பிறகு திமுக சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை மனக் கசப்போடு ஆதரிக்கும் என்று கலைஞர் அறிவித்தார்.அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா? திமுக எதிர்த்தால் காங்கிரஸ் ஆட்சி கலைந்து விடும் மதவாத கட்சியான பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்கிறார்.இவ்வாறு சொன்ன இதே கலைஞர் சென்ற பாஜக ஆட்சியில் முழுமையாக ஐந்து ஆண்டுகள் பங்கு வகித்தார் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்.
அவருக்கு தேவை நடுவண் அரசில் பதவி,எந்த அரசாக இருந்தாலும் பரவாயில்லை,தேவகௌடா அரசிலும்,ஐ.கே.குஜரால் அரசிலும், பாஜக அரசிலும் அவரது மருமகன் முரசொலிமாறன் மத்திய அமைச்சராக இருந்தார்,அதற்கு பிறகு இப்போது நடந்து கொண்டு இருக்கிற எட்டரை ஆண்டுகால காங்கிரஸ் அரசில் அவரது பேரன்,அவரது மகளுக்கு வேண்டப்பட்டவர்கள் என்று எப்போதும் அதிகாரத்தில் இருக்க ஆசைப்படுபவர்.
இப்போது தன் மகளுக்காகவும்,ராஜாவுக்காகவும், கலைஞர் தொலைக்காட்சி வழக்கில் இருந்து விடுபடவும் அவர் காங்கிரஸ் கட்சியை கண்மூடித்தனமாக ஆதரிக்கவேண்டிய நிலையில் உள்ளார்.ஆக அவருக்கு அவருடைய சுயலாபம் தான் முக்கியம்.மக்களாவது மன்னாங்கட்டியாவது.
ஐந்து ஆண்டுகள் பாஜக ஆட்சியில் பங்கு வகித்தபோது பாஜக மதவாத கட்சி என்று கலைஞர் அவர்களுக்கு தெரியாதா?அவர் எலிப்போறிக்குள் மாட்டிக்கொண்டு இருக்கிறார் உள்ளே இருந்தாலும்,வெளியில் போனாலும் இழப்பு அவருக்குத் தான் என்பதை அவர் மறந்து விட்டார்.ஏற்கனவே ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டு இப்போது எல்லாம் முடிந்த பிறகு டெசோ மாநாட்டு தீர்மானத்தை ஐ.நா சபை மனித உரிமை அமைப்பில் கொடுத்து விட்டு தமிழருக்கு இவர்தான் நல்லது செய்கிறவர் போல் நாடகமாடுகிறார்.ஏன் இவருக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசு மூலமாக ஐ.நா சபையில் இந்தியாவின் பிரதிநிதியாக பேசி இருக்கலாமே?அதையெல்லாம் செய்வாரா இவர்.இவருக்கு தேவை அதிகாரம்,அமைச்சர் பதவி மட்டுமே.
ஈழத் தமிழர்களும்,சில்லறை வியாபாரிகளும் வாழ்ந்தால் என்ன,செத்தால் என்ன அதை பற்றி எல்லாம் கவலை இல்லை.
அறிஞர் அண்ணா பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போன்றது என்றார் ஆனால் அவர் வழி வந்தவர் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞர் அவர்களோ பதவியை இடுப்பில் கட்டும் வேட்டியாக மாற்றிக்கொண்டார் என்பது தான் வேதனை. துண்டு இல்லாமல் இருக்கலாம் ஆனால் வேட்டி இல்லாமல் இருக்க முடியுமா?
காங்கிரசின் எல்லா அக்கிரம,அநியாயங்களுக்கும் துணை போகிறார்,அதற்கான பலனை நிச்சயம் இவர் அனுபவிப்பர்.எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும் கலைஞர் அவர்களே.
இப்போது சொல்லுங்கள் யார் நல்ல வியாபாரி என்று?...
அருணை வினோத்.