என்னுடைய நண்பர் தன்னுடைய மகனுக்கு 3 ஆம் வகுப்பு சேர்க்க கடந்த இரண்டு மாதங்களாக பள்ளி தேடிக்கொண்டு இருக்கிறார். 3 ஆம் வகுப்பு சேர்க்க M.P மற்றும் M.L.A பரிந்துரைகள் வேறு.அதுவும் கட்டணம் ஆண்டுக்கு 65000/- ரூபாய்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு பள்ளியில் சொன்னார்களாம் இந்த வருட சேர்க்கைக்கு இப்போது வந்து விண்ணப்பம் கேட்டால் என்ன செய்வது,நாங்கள் போன வருடமே முடித்து விட்டோம் என்று?...
எதிர்காலத்தில் குழந்தை கருவில் இருக்கும் போதே விண்ணபிக்க வேண்டும் போல...எங்கே சென்று கொண்டு இருக்கிறது கல்வி?...
தோனி படத்தில் வரும் வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது “IIT க்கு கூட அப்ளிகேசன் ஆன்லைனில் கிடைக்கிறது ஆனால் L.G.K க்கு இரண்டு மாசத்துக்கு முன்னாடி வாங்கணும்”.
L.G.K விண்ணப்ப கட்டண விலை, IIT மற்றும் பல்கலைக்கழக விண்ணப்ப கட்டணங்களை விட அதிகம்.
இதில் மூன்றாம் வகுப்பு குழந்தைக்கு நுழைவு தேர்வு வேறு வைக்கிறார்கள்?.நல்ல வேளை பெற்றோருக்கு நுழைவு தேர்வு வைக்கவில்லை.
இந்த அளவுக்கு கல்வி வியாபாரமாகி போனது ஏன்?...
பெரும்பான்மையான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மெட்ரிக் அல்லது சிபிஎஸ்சி பள்ளியில் மட்டுமே படிக்க வைக்க விரும்புகிறார்கள்.
இப்போது எல்லாம் மெட்ரிக் பள்ளிகளில் சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளதால்,நடுத்தர குடும்பத்தில் உள்ள பலர் சமச்சீர் கல்வி முறையை விரும்பவில்லை,அதனால் பலர் சிபிஎஸ்சி பள்ளிகளை தேடி செல்கின்றனர்,டிமாண்ட் அதிகமாக இருக்கும் போது விலை உயர்வும் அதிகமாக இருக்கும் அதுபோல கல்வி கட்டணமும் உயர்ந்து இருக்கிறது.
இப்போது பல மெட்ரிக் பள்ளிகள் சிபிஎஸ்சி பள்ளிகளாக மாறிக்கொண்டு இருக்கின்றன.அப்போது தான் அவர்களாலும் அதிக கட்டணம் வசூலிக்க முடியும்,அதிகம் சம்பாதிக்க முடியும்.
இப்போதுள்ள 75% பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சம்பாதிக்கும் நோக்கோடுதான் செயல்படுகின்றன.சொற்ப பள்ளி,கல்லூரிகளே சேவை மனப்பான்மையோடு செயல்படுகின்றன.
சேவையாக இருந்த கல்வி இப்போது வியாபாரமாகி விட்டது என்பது தான் வேடிக்கை.எப்போதோ படித்த ஒரு கவிதை நியாபகம் வருகிறது.
“படித்தவன் பாடம் நடத்துகிறான்,
படிக்காதவன் கல்லூரி நடத்துகிறான்.”
கட்டண உயர்வுக்கு மக்களின் மனநிலை தான் முக்கிய காரணமாக உள்ளது.
ஒரு நடுத்தர குடும்பத்தின் வருமானத்தில் முக்கால் வாசியை சென்னையில் வீடு வாடகையும்,கல்வி கட்டணமும் தான் சாப்பிடுகிறது.மீதியை தான் மனிதன் சாப்பிடமுடிகிறது.
அரசாங்கமும் இலவச கல்வி கொடுக்க எவ்வளவோ முயற்சிகளை எடுத்து கொண்டு இருக்கிறது.கட்டாய இலவச கல்வி சட்டமும் இயற்றப்பட்டு இருக்கிறது.
டிவி,மிக்ஸ்சி,கிரைண்டர் போன்ற இலவசங்களை வரிசையில் நின்று பெற்று கொள்வதை போல இலவச அரசு கல்வி கூடத்தில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க கூடிய மனநிலை இல்லை.மக்களின் மனநிலையை என்ன சொல்ல?...
மக்களுக்கு அரசு பள்ளிகளின் தரம் பற்றிய கவலை?..ஆனால் அரசு இலவசமாக தரும் பொருட்களின் தரத்தை பற்றி கவலை இல்லை...அதற்காக செலவிடப்படும் மக்களின் வரிப்பணம் பற்றி கவலை இல்லை.
இப்போதெல்லாம் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளிலும் நன்றாகதான் கல்வி கற்பிக்கப்படுகிறது,அதன் தேர்ச்சி விழுக்காடும் உயர்த்து கொண்டு தான் இருக்கிறது.தனியார் வசம் உள்ள மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளில் படித்தால் தான் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்ற தவறான மனநிலையே இதெற்கெல்லாம் காரணம்.அரசு பள்ளி,கல்லூரிகளில் படித்து உயர்ந்தவர்கள் இந்த சமுதாயத்தில் பல பேர் இருக்கிறார்கள் அவர்களை இந்த பெற்றோர்கள் முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.
மக்களாய் பார்த்து மாறினால் தான் இதற்கு விடிவுகாலம்,இல்லையென்றால் கல்வி வியாபாரத்தை யாராலும் மாற்ற முடியாது.
அருனைவினோத்
No comments:
Post a Comment