ஐ.நா வின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக வாக்களித்துவிட்டு,இலங்கையை சமாதானப்படுத்த பிரதமர் கடிதம் எழுதி இருப்பது,தமிழர்களாகிய நமக்கு பெருத்த அவமானம்,இதில் இருந்தே தெரிகிறது இந்தியாவின் இரட்டை வேடம்.
இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக, இந்தியா வாக்களித்தது.ஆனால், இலங்கை தனது நல்லிணக்க ஆணைக் குழுவின்(LLCR) பரிந்துரைகளை அமல்படுத்துகிறதா என்பதை மனித உரிமைகள் கவுன்சில் கண்காணிக்க வேண்டும். அதற்கான தொழில்நுட்ப உதவிகளை இலங்கை மனித உரிமை கவுன்சிலிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா சேர்த்திருந்த வரிகளில் இந்தியா திருத்தம் கொண்டு வந்தது.அதன்படி இலங்கையின் விருப்பப்படி தான் கவுன்சில், அந்நாட்டிற்கு உதவி அல்லது கண்காணிப்பு செய்ய முடியும். இது இலங்கைக்கு மிகவும் சாதகமான திருத்தம்.
இந்தியா,இலங்கைக்கு எதிராக வாக்களித்து விட்டு,அதே இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தில் திருத்தும் செய்தது,இதில் இருந்தே தெரிகிறது இந்தியாவின் இரட்டை வேடம்.
“பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுகிறது” இந்தியா.
இந்தியா எப்பொழுதும் இலங்கைக்கு ஆதரவாக தான் இருக்கும் என்பதற்கு இந்த கடிதம் ஒன்றே போதும்.இந்தியாவுக்கு தமிழ்நாட்டில் வாழும் ஏழு கோடி தமிழர்களை விட,அவர்களின் உணர்வுகளை விட இலங்கையின் ராஜபக்சே தான் முக்கியமானவர் என்பதை இந்த கடிதம் உணர்த்தி இருக்கிறது.
எதிர்காலத்தில் இந்தியாவில் வாழும் தமிழர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றாலும் இந்தியா இப்படித்தான் வேடிக்கை பார்க்கும் போல,இந்த காங்கிரஸ் அரசுக்கு தமிழ் நாட்டை பற்றியும் அங்கு வாழும் மக்களை பற்றியும் கவலை இல்லை.
இல்லையென்றால் இலங்கையை சமாதானப்படுத்த வேண்டிய நோக்கம் என்ன?...கோவத்தில் இலங்கை எல்லாவற்றையும் வெளியில் சொல்லிவிட்டால் இந்தியாவின் வேசம் களைந்து விடும் என்ற நோக்கத்தில் தான் என்பதை தமிழர்களாகிய நாம் உணர வேண்டும்.
ஏனென்றால் இந்த இன படுகொலைக்கு இந்தியாவும் உடந்தை என்பதை நாம் இதில் இருந்து தெள்ள தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்தியாவை இலங்கை மிரட்டுகிறது, பயங்கரவாத விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டி வரும் என்று,இந்தியாவின் பலம் என்ன இலங்கையின் பலம் என்ன?...இலங்கை எல்லாம் மிரட்டுகிற அளவுக்கு இந்தியா தரம் தாழ்ந்து போய்விட்டது தான் வேதனை. ஏனென்றால் இந்தியா இதில் கூட்டு களவாணி அதனால் தான்.
இலங்கை எப்போதும் நமக்கு துரோகம் தான் செய்யும் என்பதை எப்போது தான் இந்தியா உணரபோகிறதோ?..கச்சதீவில் இலங்கையின் அனுமதியுடன் சீனா ராணுவ கப்பல் தளத்தை அமைத்து வருகிறது என்பதில் இருந்தே இலங்கையின் துரோகம் இந்தியாவுக்கு புரிய வேண்டும்.அது இந்தியாவின் பாதுகாப்புக்கே ஒரு அச்சுறுத்தல்.
இந்தியா இலங்கைக்கு தரும் ஆதரவுக்கும்,ஒரு இனத்தை அழிக்க துணை போனதற்கும் மிகப்பெரிய விலை கொடுக்க போகிறது,அதற்கான நேரம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது.
No comments:
Post a Comment