நாங்கள் எங்கள் ஊரில் டீ கடை வைத்து இருந்தோம்,அந்த கடைக்கு டீ குடிக்க வருபவர்களின் சைக்கிளை வாங்கிக்கொண்டு,சைக்கிள் ஓட்ட(அரை பெடல்)கற்றுக்கொண்டேன்.ஒரு நாள் சைக்கிளில் வளைவில் எதிர்பாராதவிதமாக பேருந்தில் மோதி,என் கால் முட்டி உடைந்து ஒரு மாதம் நடக்க முடியாமல் அவதிப்பட்டேன்.இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் என் அம்மாவிடம் உங்க மகன் பிழைத்தே பெரிய விஷயம் என்றார்,அதிலிருந்து கொஞ்ச நாட்கள் சைக்கிள் ஓட்டாமல் இருந்தேன்.
5ஆம் வகுப்பு கோடை விடுமுறையில் எங்கள் ஊரில் உள்ள சோடா கலர் கடையில் வேலை செய்தேன், அங்கு இரண்டு சைக்கிள் இருந்தது, சோடா கலர்களை வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்க, அங்குதான் நான் முழுமையாக சைக்கிள் ஒட்ட கற்றுக்கொண்டேன்.பிறகு சைக்கிளின் பின் கேரியரில் இரண்டு,மூன்று கிரேடுகளை கட்டி வெளியூர்களுக்கு கொண்டு சென்றேன்,கடைக்கு தேவையான பொருட்களை வாங்க பக்கத்து டவுனுக்கு சென்று வருவது என்று என் வாழ்வில் சைக்கிள் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது.
பிறகு சைக்கிள் ஓட்டுவது எனக்கு மிகவும் பிடித்த,சந்தோஷமான பொழுதுபோக்கு ஆகிவிட்டது.5ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தினமும் சைக்கிள் ஒட்டி விளையாடுவதே என் பொழுதுபோக்கு ஆகியது.எல்லா சைக்கிள் சாகசங்களையும் செய்து இருக்கிறேன்அப்பொழுது எல்லாம் என்னிடம் சொந்தமாக சைக்கிள் இல்லை.(கடன் வாங்கித்தான்)
கல்லூரியில் சேர்ந்த பிறகு படிப்பு செலவுக்கு பணம் தேவைப்பட்டது, அதற்காக அதிகாலையில் நியூஸ்பேப்பர் போடும் வேலைக்கு சென்றேன்.அதற்காக ரூபாய் 600க்கு என் நண்பனிடம் இருந்து ஒரு சைக்கிள் வாங்கினேன்.அந்த சைக்கிள் தான் கடைசிவரை என்னுடன் பயணித்தது,அந்த சைக்கிளை கொண்டு காலையில் நியூஸ்பேப்பர் போடுவது,மாலையில் வாரஇதழ் போடுவது,கல்லூரிக்கு சைக்கிளில் போவது,வருவது என்று ஒரு நாளைக்கு 15 கிலோமீட்டர் சைக்கிளில் சுற்றி திரிந்த மிக சந்தோசமான காலம்.
சில நேரங்களில் இரவில் சைக்கிளில் சென்று நகர் முழுக்க போஸ்டர் ஓட்டியது,இரவில் யாருமே இல்லாத சாலையில் சைக்கிள் ஓட்டுவது என்று சைக்கிள் என் சந்தோசத்தை அதிகமாக்கியது.பிறகு படிப்பு முடிந்து சென்னையில் வேலை தேடி சைக்கிளில் அலைந்தது என்று சைக்கிள் என்னுடனே பயணித்தது.
பிறகு ஒரு கட்டுமான நிறுவனத்தில் பெங்களூரில் வேலைகிடைத்த பிறகு சைக்கிள் ஓட்டுவது குறைந்து போனது,எனக்கும் சைக்கிளுக்குமான இடைவெளி அதிகரித்தது.பிறகு என் நண்பனின் உறவுக்கார பையனுக்கு கல்லூரிக்கு சென்று வர சைக்கிளை கொடுத்து விட்டேன்.இப்போது என்னிடம் சொந்தமாக சைக்கிள் இல்லை.அப்போது இருந்த சந்தோசமும் இப்போது இல்லை.
இப்போது மீண்டும் ஒரு புது சைக்கிள் வாங்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன்.ஏனென்றால் சைக்கிள் என் வாழ்கையின் பிரிக்கமுடியாத நண்பனாகி விட்டது என நான் உணர்ந்திருப்பதாலும்,தொலைந்த என் சந்தோசத்தை திருப்பி பெறமுடியும் என்ற நம்பிக்கையிலும் தான்.
No comments:
Post a Comment