Friday, 4 May 2012

மதுரைக்கு வந்த சோதனை!...



மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சன்னிதானமாக, சுவாமி நித்யானந்த பரமஹம்சர் நியமிக்கப்பட்டிருப்பது அந்த ஆதீனத்தின் தனியுரிமையாக இருக்கலாம். இந்த நியமனத்துக்குத் தடை விதிக்க நீதிமன்றமும்கூட மறுத்துவிட்டது என்றாலும்கூட, மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் எடுத்த முடிவு ஆன்மிகவாதிகளைப் புண்படுத்தி இருக்கிறது என்றால், பொதுமக்களைத் திகைப்பிலும் நகைப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு பழம்பெரும் கோயில் கோபுரம் சரிந்து விழுந்தால், பக்தர்களின் மனங்கள் பதறுவதற்கு ஒப்பானது இந்தத் தவறான வாரிசு நியமன முடிவு என்பதுதான் உண்மை.

சைவத் திருமடங்கள் சமயத்தையும் தமிழையும் வளர்ப்பதற்காக நிறுவப்பட்டவை. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு சமயக் குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தொடங்கப்பட்டது மதுரை ஆதீனம் என்பது வரலாறு. இந்த ஆதீனத்தின் தலைவர் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைப்பது என்பது அறிவிப்பின் மூலம் நிகழ்த்தப்படுவதல்ல.

சைவப் பாரம்பரியத்தில் வந்த ஒருவர்தான் மடாதிபதியாக முடியும் என்பது மட்டுமல்லாமல், அப்படி மடாதிபதியாக நியமனம் பெறுவதற்குப் பல கட்டங்களைக் கடந்தாக வேண்டும். திருநீறு அணிந்து ருத்திராட்சம் தரித்து பஞ்சாட்சர மந்திரம் முறையாகக் குருமகா சன்னிதானத்திடமிருந்து உபதேசிக்கப்பட்டு தீட்சை பெறுவது முதல் கட்டம். கட்டளைத் தம்பிரானாக மகா சன்னிதானத்தின் ஏவல்களைக் கவனித்து, விசேஷ தீட்சை பெற்றபிறகு பூசைத் தம்பிரானாக நித்திய பூஜைகளைச் செய்து, ஒடுக்கத் தம்பிரானாகத் தன்னை உணரும் தியானப் பயிற்சியிலும் தேர்ந்த பிறகுதான் இளைய பட்டத்திற்கான தகுதியைப் பெற முடியும்.


இப்போதைய மதுரை ஆதீனத்தின் 292-வது குரு மகா சன்னிதானம் தனது பூர்வாசிரமத்தில் அருணகிரியாக இருந்து தருமபுரம் ஆதீனத்தில் மூன்று ஆண்டுகள் சைவ சித்தாந்தத்தில் பயிற்சி பெற்றவர். 291-வது மகா சன்னிதானம் வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் அடுத்த வாரிசு பற்றிய சூசகம் பெற்றதால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

நித்யானந்தர் சைவ வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டுமே ஓர் ஆதீனத்தின் வாரிசாகப் பட்டம் சூட்டுவதற்குப் போதுமான தகுதி அல்ல. ஏனெனில், சுவாமி நித்யானந்த பரமஹம்சர் ஒரு யோக குரு. வேதம், தாந்தீரிகம், யோகம் பயின்றவர். அவருக்கு சைவ சித்தாந்தத்தில் போதுமான பயிற்சி கிடையாது.


பக்தி மார்க்கம் அவரது வழிமுறை அல்ல. அவரது சீடர்கள் பக்தி செய்தாலும், அவரது படத்துக்குத்தான் பூஜை செய்கிறார்களே தவிர, அவர்கள் சைவ சித்தாந்திகள் அல்லர். சுவாமி நித்யானந்தரின் பயிற்சிகள் ஹதயோகம் சார்ந்தவை; சித்தர் வழிமுறை. சித்தர்கள் மனவெளி மனிதர்கள். சாதாரண மனிதர்களின் மனஒழுங்குகள் சித்தர்களிடம் கிடையாது. அவர்களும் அவர்களது பயிற்சிகளும் சமயச் சடங்குகளுக்குக் கட்டுப்படாதவை.
ஆனால், மதுரை ஆதீனத்தின் அடிப்படையோ, சடங்குகள், மரபுகள் சார்ந்தது. சாதாரண எளிய மனிதர்களை உருவ வழிபாட்டின் மூலம் மனதைக் கனியச் செய்து, கடைத்தேற்றம் செய்யும் பக்தி மார்க்கம். மேலும், மடாதிபதிகள் என்பவர்கள் அவர்கள் சார்ந்த திருமடங்களில் திரண்ட சொத்துகளைப் பராமரிக்கும் நிர்வாகிகளும்கூட. சைவ சித்தாந்த வகுப்புகளில் தொடங்கி, அவர்களது திருமடத்துக்குச் சொந்தமான, சம்பந்தப்பட்ட ஆலயங்களின் சமயச் சடங்குகளை நிர்வகிக்கும் பொறுப்புகளையும் கொண்டவர்கள்.


மதுரை ஆதீனத்தின் திரண்ட சொத்துகளை அபகரிக்க நித்யானந்தர் முயற்சிக்கிறார் என்கிற குற்றச்சாட்டில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. நித்யானந்த தியான பீடத்துக்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. அவற்றின் சொத்துகள் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம். ஆகவே, ஆதீனத்தின் சொத்துகளை அவர் அழித்துவிடுவார் என்ற அச்சம் அர்த்தமில்லாதது.


தனது சீடர்கள் உதவியுடன் உலகம் முழுவதிலும் 40 இடங்களில் மதுரை ஆதீனத்தின் கிளைகள் தொடங்கப்படும் என்று பட்டமேற்ற நாளில் சுவாமி நித்யானந்தர் கூறியிருக்கிறார். ஒரு மதம் எவ்வாறு வழிபாட்டுக்கூடங்களின் எண்ணிக்கையை வைத்து அளவிடப்பட முடியாதோ, அதேபோன்று ஒரு மடம் அல்லது ஆதீனத்தின் சமயக் கொள்கையை அதன் கிளைகளின் எண்ணிக்கையால் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது. மனிதர்கள் தேடி வந்தால் அது ஆன்மிகம். மனிதர்களைத் தேடிச் சென்றால் அது வணிகம்.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் குருமகா சன்னிதானமாக நித்யானந்தர் தரிசனத்துக்கு வருவதும் அவரது சீடர்கள் நித்யானந்தரைப் போற்றி கோஷம் எழுப்புவதும் மதுரை ஆதீனத்துக்கு இழைக்கப்படும் அவமானம் என்பதை அவர் ஏன் உணரவில்லை? உலகளாவிய அளவில் தனது ஆன்மிகப் பணியை எடுத்துச் செல்லும் வாய்ப்புள்ள நித்யானந்தர் தன்னை ஏன் மதுரை ஆதீனமாகச் சுருக்கிக் கொள்ள வேண்டும்?


ஒவ்வொரு மனிதருக்கும் ஓர் அடையாளம் உள்ளது. பெயர் உள்ளது. முகவரி உள்ளது. ஆதீனங்களும் அப்படித்தான். மதுரை ஆதீனத்துக்கு ஒரு வரலாறும், தனிஅடையாளமும் பாரம்பரியமும் உள்ளது. நித்யானந்தருக்கு என்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. பக்தர்கள் இருக்கிறார்கள். நித்யானந்த தியான பீடத்துக்குள் மதுரை ஆதீனம் கரைந்துவிடுவதும் தவறு. மதுரை ஆதீனத்தில் நித்யானந்த தியான பீடம் கலந்துவிடுவதும் தவறு. இவையென்ன அரசியல் கட்சிகளா ஒன்றோடு ஒன்று இணைவதற்கும் பிரிவதற்கும்? இல்லை, இதென்ன வணிக நிறுவனங்களா ஒன்றை ஒன்று விழுங்குவதற்கு?...

பக்தர்களின் நம்பகத்தன்மையைப் பெறுவதிலும் மக்களோடு மக்களாய் மாற வேண்டிய அணுகுமுறைகளிலும் அக்கறை கொள்ள வேண்டிய மடாலயங்கள், தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி, கேலிப் பொருளாவது வேதனையிலும் வேதனை. இத்தகைய நடவடிக்கைகளால் ஏற்படும் சலிப்பு, மக்களின் தெய்வ நம்பிக்கையை பலவீனப்படுத்தும். இதை மதுரை ஆதீனம், சுவாமி நித்யானந்தர் இருவருமே புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், இவர்களை சரித்திரம் ருத்திராட்சப் பூனைகள் என்று எள்ளி நகையாடும்!..



நன்றி - தினமணி தலையங்கம்

No comments:

Post a Comment