Monday, 9 April 2012

வலிகளை வெல்லும் காலம்…


வாழ்க்கையில் இன்பம்,துன்பம் மாறி மாறி வரும்.அதுதான் ஒரு சுவாரசியமான வாழ்க்கையாக இருக்கும்.சிலருக்கு வாழ்வில் சில துன்பமான நிகழ்ச்சிகள் நடந்து அவர்களின் வாழ்க்கையே மாற்றி விடும்,மேலும் ஆறாத காயங்களை மனதில் ஏற்படுத்திவிடும்.அதற்கு மருந்து இல்லை.காயங்களுக்கு மருந்து கால மாற்றம் மட்டுமே.


காலம் எல்லா வகையான காயங்களுக்கும் மருந்து போடும்.அதற்கு ஆகும் நேரம் மட்டுமே முன்,பின் இருக்கும்.அதற்குள் நமக்கான வாய்ப்புகள் ஓடிவிடும்.



எல்லா காயங்களும் ஆறி,காலங்கள் ஓடிய பிறகு நமக்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்கும்.அதற்கு பிறகு வாய்ப்புகளை நாம் தேடி அலைய வேண்டி இருக்கும்.


சில சமயங்களில் வாய்ப்புகள் நம் கதவுகளை தட்டும்,அதை நாம் பயன்படுத்தி கொள்ளாத போது,நாம் பலவற்றை இழக்க வேண்டி இருக்கும்.நமக்கு தேவைப்படும் போது நம்மால் வாய்ப்புகளை உருவாக்க முடியாது.அப்படியே உருவாக்க முயன்றால்,அதற்காக நாம் அதிகம் உழைக்க வேண்டி வரும்,இல்லையென்றால் நாம் அதிக விலை கொடுக்க வேண்டிவரும்.



முடிவில்லா தேடல் மட்டுமே நல்ல வாழ்க்கையை உருவாக்கும்.வாய்ப்பு என்பது வாழ்க்கை தேடலே.விலை என்பது நம் வாழ்வின் துன்பங்களே.வாய்ப்புகள் மறுக்கப்படும் போது வலி அதிகமாகவே இருக்கும்.



உங்கள் மனதைக் கேட்டுப்பாருங்கள் ஆயிரம் வலிகளை சொல்லும்,அந்த ஆயிரம் வலிகளும் ஆயிரம் காரணங்களை சொல்லும். வலிகள் தான் வாழ்க்கையை மாற்றும்,வளமாக்கும்.


வலி இல்லா வாழ்க்கை துடுப்பில்லா படகைப் போன்றது,எனவே வலிகளை வெல்வோம்.


நீங்கள் ஒரு பெண்ணை காதலிக்கறீர்கள்,அவளுக்காக தினமும் மணிகனக்காக காத்து இருந்து,பேசி,பழகி ஒரு நாள் அவள் உங்களை விட்டு பிரிந்து விடுகிறாள்.நீங்கள் உயிருக்கு உயிராக காதலித்த பெண்,அவள் தான் உங்கள் வாழ்க்கை,உலகம்,இன்பம்,துன்பம் என்று நீங்கள் நினைத்த பெண்,உங்களை விட்டு பிரிந்து விட்டால்,அந்த வலி எப்படிப்பட்ட வலியாக இருக்கும் என்பது அதை அனுபவித்தவனுக்கு தான் அதன் வலி தெரியும்.சில சமயம் செத்து விடலாம் என்று கூட தோன்றும்.அப்படிப்பட்ட வலி,வேதனை,சோகம் எல்லாம்.


எந்த பெண் உங்களுடன் இருக்கும்போது மகிழ்ச்சியாகவும்,வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைத்தீர்களோ,அதே பெண் உங்களை விட்டு பிரிந்த பிறகு சாக தோன்றுகிறது,இதுதான் வலியின் உச்சம்.


நீங்கள் உண்மையாக நம்பிய நண்பன் உங்களுக்கு துரோகம் செய்யும் போதும்,உங்கள் சகோதரர் மற்றும் உறவினர்கள் உங்கள் சொத்துகளை ஏமாற்றும் போதும்,இப்படி பல துரோகங்கள்,ஏமாற்றங்களால் வரும் வலிகள் அதிகம்.வலிகளுக்கு காலம் தான் சிறந்த மருந்து.


சில வலிகள் வாழ்க்கை முழுவதும் வலிக்கும்,சில வலிகள் காலபோக்கில் மறைந்து போகும்.


காலம் போல் சிறந்த மருந்து இந்த உலகில் எதுவும் இல்லை,ஆகவே வலிகளை காலத்தால் வெல்வோம்.


வாழ்க்கை வாழ்வதற்கே......  

1 comment: