கடந்த சில வருடங்களாக மின்சாரம் எப்போது வரும்,எப்போது போகும் என்றே தெரியாது,அந்த அந்த அளவுக்கு நிலைமை மோசம். சென்னை மாநகரத்தில் 2 மணி நேர மின் தடை,வெளியூர்களில் 4 மணிநேர மின்தடை என்று அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்பட்டாலும்,அறிவிக்கபடாத மின்வெட்டு 8 மணி நேரத்திற்கும் மேலாக இருக்கிறது.இதனால் தொழில் துறை நலிவடைந்து உள்ளது.
மின்சார அரசியல்
கடந்த தி.மு.க ஆட்சியில் அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சொன்னார் மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வர முடியாமல் போனால் அதற்கு நானும் தொடர் மின்தடையும் ஒரு காரணமாக அமையும் என்றார்.அதே போல் ஜெயலலிதா ஊருக்கு ஊர் மேடைக்கு மேடை தி.மு.க அரசின் மின்தட்டுப்பாட்டை பற்றியும் நிர்வாக சீர்கேடு பற்றியும் பேசினார்,நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்தில் மின்தட்டுப்பாட்டை சரிசெய்வோம் என்று சொன்னார்.அவர் ஒரு முன்னால் முதல்வர் நிச்சயம் அவரிடம் ஏதோ திட்டம் இருந்திருக்க வேண்டும்.அதை நம்பித்தான் மக்கள் வாக்களித்தார்கள்,ஆனால் சொன்னதை செய்ய தவறினார் ஜெயலலிதா.இப்போதும் அவர் சொல்கிறார் முந்தைய தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேடுகளால் எங்களால் போதிய மின்சாரம் வழங்க முடியவில்லை.இன்னும் எவ்வளவு நாளுக்குதான் இதை சொல்லி காலத்தை ஓட்ட முடியும்.எவ்வளவு நாள் தான் மக்கள் இதை கேட்பார்கள்,தெரியவில்லை?...
சில வருடங்களாக நம் மின்சாரதேவை ஆண்டுக்கு 10% அதிகரித்து உள்ளது,ஆனால் அதற்கான உற்பத்திதான் இல்லை.நீண்டகால அடிப்படையில் நம்மிடம் திட்டங்கள் இல்லாதது தான் காரணம்.நீண்டகாலமாக திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியில் உள்ளன.ஆனால் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இருவரும் மாறி மாறி புள்ளி விவரங்களை மட்டுமே கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.நமக்கு புள்ளிவிவரங்கள் தேவையில்லை,மின்சாரம் மட்டுமே தேவை,அதற்கான திட்டங்களை இந்த அரசு கொண்டு வர வேண்டும்.
அனல் & புனல் மின்சாரம்
தமிழகத்தின் அனல், புனல் மின்நிலையங்களின் மொத்த மின்உற்பத்தித் திறன் 10,230 மெகாவாட். இருப்பினும் நம்மால் 8,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகின்றது. தேவையோ 11,000 மெகாவாட். கூடுதலாக 3,000 மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால், அது காசு கொடுத்தாலும் கிடைக்கக்கூடிய பொருளாக இல்லை என்பதால்தான் இன்றைய சிக்கல்.
நம் மொத்த மின் உற்பத்தியில் 27.15% வீட்டு இணைப்புகளுக்கும்,35% தொழில்துறைக்கும்,21%விவசாயத்திற்கும்,10.5%வணிகபயன்பாடுகளுக்கும் செலவிடப்படுகிறது.தற்போதைய மின்உற்பத்திச் செலவு 5 ரூபாய் 31 காசுகள் ஒரு யூனிட்டுக்கு.
நம் மொத்த உற்பத்தியில் 56 % தொழில்துறையும்,வணிகத்துறையும் செலவழிகின்றன,வீட்டு இணைப்புகளுக்கு மட்டுமே மானிய விலையில் மின்சாரம் வழங்கபடுகிறது.
2010-11ம் ஆண்டில் தமிழ்நாடு மின்வாரியத்தின் வருவாய் ரூ.22, 341 கோடி. செலவு 33,291 கோடி. இதில் ரூ.19,356 கோடி மின்சாரம் வாங்குவதற்காக செலவிடப்படுகிறது.
மின்உற்பத்தி எரிபொருள் செலவு ரூ.4,359 கோடி, ஊழியர் சம்பளம் ரூ.3,410 கோடி. ரூ.45,000 கோடி கடனுக்காகச் செலுத்தும் வட்டி ரூ. 2,644 கோடி.மின்வாரியத்தின் மொத்த வருவாய் இழப்பு ரூ.40, 000 கோடிக்கும் மேல்.
கூடங்குளம் மின்நிலையம் செயல்படத் தொடங்கியிருந்தால் 400 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு கிடைத்திருக்கலாம்.(Capacity 2000 MWe)
நிலக்கரி விலை உயர்வு, நிலக்கரி தட்டுப்பாடு ஆகியவற்றால் நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாமல் அனல் மின் நிலையங்கள் திணறிவருகின்றன.இனிமேல் புதிய மின் நிலையங்கள் அமைப்பது கடினம் மேலும் உற்பத்தி செலவும் அதிகமாக இருக்கும்.
நாம் குடிக்கவும்,விவசாயம் செய்யவும் நீர் இல்லாமல் அவதிப்படும் வேளையில் எப்படி புனல் மின்சாரம் உற்பத்தி முடியும்.இப்போது உள்ள உற்பத்தி திறனுக்குமேல் அதிகரிக்க முடியாது.அதற்கான வாய்ப்பும் இல்லை.
சுமார் 30% to 32 % மின் திருட்டு நடைபெறுகிறது,அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதில் விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் அடங்கும். சிலர் விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வியாபரத்துக்கு பயன்படுத்துகின்றனர்.மின் திருட்டு தடுப்பு படை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது,அனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. மின்திருட்டை தடுக்க கடுமையான (சட்டங்கள்) நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
அணு மின்சாரம்
நம் மின் தேவையை பூர்த்தி செய்ய அணு மின்சார உற்பத்தி தான் ஒரே வழி என்கிறது அரசு,ஆனால் மக்களிடம் பயம் அதிகமாக உள்ளது புகுஷிமா விபத்துக்கு பிறகு.இந்தியாவில் 3 மாநிலத்தில் 6 அணு உலைகள் கட்டபட்டுவருகின்றன.மொத்த மின் உற்பத்தி திறன் 4800 MWe .(கூடங்குளம் 2000 MWe உட்பட).ஒரு யூனிட்டுக்கு உற்பத்தி செலவு 3 ரூபாய்.
இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள மொத்த அணு உலைகளின் எண்ணிக்கை 20 .மொத்த மின் உற்பத்தி திறன் 4780 MWe .அமெரிக்காவில் 104 அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன.
நம்முடன் வளரும் நாடான சீனாவில் 15 அணு உலைகள் உள்ளன.மொத்த மின் உற்பத்தி திறன் 11881 MWe ,26 அணு உலைகள் கட்டபட்டுவருகின்றன.மொத்த மின் உற்பத்தி திறன் 27640 MWe .இனி வரும் ஆண்டுகளில் 51 அணு உலைகள் கட்ட திட்டமிடப்படுள்ளது.சீனா வளர்ச்சி அடைய (தொழில் துறை) அணு மின்சாரம் தான் தீர்வு என நம்புகிறது.எனவே இந்தியாவும் வளர்ச்சி அடைய, அதிகரித்து வரும் மின்தேவையை பூர்த்தி செய்ய அணு மின்சாரத்தை நம்புவதை தவிர வேறு வழி இல்லை.
மரபுசார மின்சக்தி மூலமாக இவ்வளவு அதிகமான மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய இயலுமா என்பது தெரியவில்லை?...
அறிவியல் கண்டுபிடிப்புகளில் நன்மையையும்,தீமையும் கலந்தே இருக்கிறது,எனவே மிக உயர்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமக்கு தேவையான நன்மைகளை அறிவியலில் இருந்து பெறுவோம்.
நாடும்,மக்களும் பொருளாதரத்தில் வளர்ச்சியடைய மின்சாரம் மிக முக்கியமானது என்பது மறுக்க முடியாத உண்மை,ஆகவே தடையற்ற மின்சாரத்தை மக்களுக்கு வழங்க வேண்டிய கடமை இந்த அரசுக்கு இருக்கிறது,ஆகவே அதிகரித்து வரும் மின்தேவையை கருத்தில் கொண்டு நீண்டகாலதிட்டங்களை இப்போதே செயல்படுத்த தொடங்கவேண்டும்.அப்போதுதான் இந்த இருள் விலகும் இல்லையென்றால் இந்த இருள் மொத்த மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கிவிடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
No comments:
Post a Comment