Wednesday, 14 May 2014

தமிழருவி மணியன் மன்மோகன் சிங்க்கு கடிதம்


மாண்புமிகு பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு... உங்கள் பத்தாண்டு கால ஆட்சியால் பாதிக்கப்பட்ட பலகோடி சாமான்ய இந்தியக் குடிமக்களில் ஒருவன் மிகுந்த பணிவோடும் நிறைந்த நல்லன்போடும் எழுதும் கடிதம். உங்கள் நேசத்துக்கும் நம்பிக்கைக்கும் உரிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆழ்ந்த அறிவுள்ளவர். இந்தக் கடிதத்தின் சாரத்தை அவர் மூலம் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுகிறேன்!

 

ஒருவகையில் நீங்கள் ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; வேறு வகையில் மிக மோசமாகச் சபிக்கப்பட்டவர். நாட்டில் யாரும் எதிர்பார்த்திராத நிலையில் உங்களைப் போன்று பிரதமர் நாற்காலியில் ஆரோகணித்து அமரும் நல்வாய்ப்பைப் பெற்ற தேவகௌடா 10 மாதங்களும், குஜ்ரால் 11 மாதங்களும் மட்டுமே பதவியை அலங்கரித்தனர். ஆனால், நீங்களோ நேருவுக்குப் பின்பு தொடர்ந்து இருமுறை முழுமையாக 10 ஆண்டுகள் பிரதமராக இருந்து சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தையே படைத்துவிட்டீர்கள். இந்திரா காந்திக்கே வந்து வாய்க்காத பெருமை உங்களுக்கு வாய்த்தது ஒரு வரலாற்று அதிசயம்.

காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதத்தை வல்லபபாய் படேல் ஆதரிக்கவில்லை. அன்றைய செல்வாக்கு மிக்க காங்கிரஸ் தலைவர்கள் டி.பி.மிஸ்ராவும், என்.வி.காட்கிலும், 'கட்சி உங்கள் பக்கம் இருக்கிறது. நீங்கள் நினைத்தால் நேருவின் பதவியைப் பறித்து அந்த நாற்காலியில் அமர்ந்துவிட முடியும்என்று ஆலோசனை வழங்கியபோது, 'கட்சி என் பக்கம் இருப்பது உண்மைதான். ஆனால், மக்கள் நேருவின் பக்கம் இருக்கிறார்களேஎன்றார் படேல். உங்கள் பக்கம் கட்சியும் இல்லாமல், மக்களும் இல்லாமல் பிரதமராக 10 ஆண்டுகள் பவனிவர முடிந்தது என்றால், விதியின் வலிமையை யாரோ அளக்கவல்லார்!

பிரதமர் கனவில் நீண்ட காலம் அரசியல் நடத்திய சரண்சிங்கும், சந்திரசேகரும் ஆறு மாதங்களுக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு மேல் முலாயம் சிங்கையும், லாலுவையும் அலைக்கழிக்கும் பிரதமர் கனவு இன்றுவரை நிறைவேறவில்லை. முலாயம் சிங், லாலுவைத் தடுக்க கௌடாவைக் கொண்டுவந்தார். லாலு, முலாயமை வரவிடாமல் செய்வதற்குக் குஜ்ராலைத் தேடிக் கண்டுபிடித்தார். இளவரசர் ராகுல் அரசியல் முதிர்ச்சி அடையும் வரை பிரதமர் நாற்காலியைப் பாதுகாக்க சோனியா காந்தி உங்களைப் பயன்படுத்திக்கொண்டார். இந்தப் பிரதமர் பதவிக்காக நீங்கள் அளித்த விலை மிகவும் அதிகம்.

ஜெயலலிதா சட்டத்தின் பிடியில் இருந்து விடுபட்டு மீண்டும் முதல்வராகும் வரை அவருடைய பேரருளுக்கும் பெருங்கருணைக்கும் பாத்திரமான பன்னீர்செல்வம் மாநில முதல்வராகக் காட்சியளித்தார். எந்த அதிகாரமும் அவர் கையில் இல்லை. அது குறித்து அவர் கவலைப்படவும் இல்லை. ஓர் ஊராட்சி ஒன்றியச் செயலாளராக இருந்தவர். ஒரு மாநிலத்துக்கே முதல்வராவதெனில், அவரளவில் அது இந்திரப் பெரும்பதம் அல்லவா! ஆனால், பன்னீர்செல்வமும் நீங்களும் ஒன்றா? யோசிக்கும் வேளையில் நீங்கள் இழந்த பெருமையை நீங்களே உணர்வீர்கள்.

மாண்புமிகு பன்னீர்செல்வத்துக்கு அரசியல் முகமும் முகவரியும் அளித்து ஆட்கொண்டவர் ஜெயலலிதா. முதல்வர் ஜெயலலிதா ஒரு கணம் நினைத்தால் போதும்... பன்னீர்செல்வம் இருக்கும் இடம் பக்கத்து மனிதனுக்கும் தெரியாமற் போய்விடும். அந்த நன்றியுணர்வுதான் ஜெயலலிதா விண்ணில் வரும்போதே அவரை மண்ணில் முதுகு வளைத்து மண்டியிடச் செய்கிறது. நீங்கள் யார் பிரதமரே? உலகம் புகழும் பொருளாதார மேதை; ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளியலில் பெருமைக்குரிய முனைவர் பட்டம் பெற்றவர்; மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் முதன்மை ஆலோசகராகவும், ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும், மத்திய திட்ட கமிஷனின் துணைத் தலைவராகவும், ஐ.நா. அமைப்பில் உயர்நிலை அதிகாரியாகவும் பல்வேறு நிலைகளில் அறிவுசார் நிபுணராகவும் வலம்வந்து, நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்று, நாட்டில் புதிய பொருளாதாரச் கொள்கைக்கு வடிவம் வழங்கியவர். சோனியா உங்களைப் பிரதமராக்குவதற்கு முன்பே உங்களுக்குச் சுயமாக முகமும் இருந்தது; முகவரியும் இருந்தது. ஆனால் இன்று, கலியுகக் கர்ணனாய் நீங்கள் நன்றிக்கடன் செலுத்தியதில் உங்கள் பெருமையும் புகழும் சிதைந்துவிட்டது.

ஒரு குறிப்பிட்ட துறையில் உச்சம் தொட்டவர், மற்ற துறைகளிலும் அதேயளவு ஆற்றல் கொண்டவராக இருப்பதில்லை. 'விரல் முனையில் ஆயிரம் ராகங்களுக்கு வாழ்வளித்த விஸ்வநாதனுக்கு விஜயவாடா எங்கிருக்கிறது என்று தெரியாதுஎன்பார் கண்ணதாசன். நீங்கள் பொருளாதாரத்தில் மேதை. ஆனால், வரலாற்றுத் தாழ்வாரங்களில் நீங்கள் போதுமான அளவுக்கு நடைபயின்றதில்லை என்று நினைக்கிறேன். அரசியலுக்கும் நன்றிக்கும் அணுவளவும் சம்பந்தம் இருப்பதில்லை பிரதமரே!

அண்ணல் காந்தி தன்னுடைய அரசியல் வாரிசாக நேருவை அறிவிக்காமற் போயிருந்தால் அவர் படேலிடம் பிரதமர் பதவியைப் பறிகொடுத்திருப்பார். 'என்னுடைய மொழியில் இவர் பேசுவார்’ (He will speak my language) என்று நம்பிக்கையுடன் சொன்ன காந்தியின் மொழியில் நேரு பாரதப் பிரதமராக 17 ஆண்டுகள் பேசவுமில்லை; காந்தியத்தின் வழியில் நாட்டை நடத்தவுமில்லை. காமராஜரின் ஆதரவுக் காற்று மொரார்ஜியின் பக்கம் திசைமாறி வீசியிருந்தால் இந்திரா காந்தி பிரதமர் பதவியை அடைந்திருக்கவே முடியாது. அந்த இந்திரா காந்தி கலைஞரின் துணையோடு காமராஜரின் அரசியல் செல்வாக்கை அழிக்கும் காரியத்தில் கடைசிவரை ஈடுபட்டார்.

இந்திரா காந்தியின் வீழ்ச்சிக்கும், ஜனதாவின் ஆட்சிக்கும் வழிவகுத்து மொரார்ஜி தேசாயைப் பிரதமராக்கியதில் பெரும்பங்கு ஜெ.பி-க்கு உண்டு. ஆட்சியில் அமர்ந்ததும் அந்த ஜெ.பி-யை அலட்சியப்படுத்தியவர் தேசாய். உத்தரப்பிரதேச அரசியலில் ஒடுங்கிக்கிடந்த வி.பி.சிங்கை மத்திய நிதியமைச்சராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவியில் அமர்த்தி, தேசிய அரசியலில் அறிமுகப்படுத்திய ராஜீவ் காந்தி, போஃபர்ஸ் விவகாரத்தில் அதே வி.பி.சிங்கின் வியூகத்தால் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு. சோனியாவின் தயவால் பிரதமராகப் பொறுப்பேற்ற உங்கள் அரசியல் ஆசான் நரசிம்ம ராவ் அந்த சோனியாவின் கட்டுப்பாட்டிலிருந்து காங்கிரஸை விடுவிக்க மேற்கொண்ட முயற்சிகளை நீங்கள் முற்றாக மறந்துவிட்டீர்களா? பிரதமர் பதவியில் அமர்த்தினார் என்பதற்காக 10 ஆண்டுகள் சோனியாவின் சூத்திரக் கயிறு இழுத்த இழுப்புக்கெல்லாம் 'கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவையாய் நீங்கள் இருந்தது நியாயந்தானா? உங்கள் நன்றியுணர்வுக்கு நாடு பாழாகிவிட்டது பிரதமரே!

பாரதப் பிரதமரே... நீங்கள் நாணயமும் நல்லொழுக்கமும் நிறைந்த ஒரு நேர்மையான மனிதர் என்றுதான் நான் இன்றும் நினைக்கிறேன். ஆனால், பனை மரத்தின் அடியில் அமர்ந்து நீங்கள் பருகிக்கொண்டிருப்பது பால்தானா என்ற ஐயம் இப்போது பலருக்கு வந்துவிட்டது. அதிகார வர்க்கத்தில் இருந்து நீங்கள் அரசியலில் வைத்த முதல் அடியே தவறானது. அசாம்  மாநிலத்தில் இருந்து 1991-ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் எந்த வகையில் அந்த மண்ணுக்குச் சொந்தமானவர்? மாநிலங்களவை உறுப்பினராக ஐந்து முறை அதே இடத்தில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டது தார்மிக அடிப்படையில் ஏற்கத்தக்கதா? சட்டத்தின் படி சரியாக இருப்பதெல்லாம் தர்மத்தின் பார்வையில் முறையாக இருப்பதில்லை.

குஜ்ரால் திடீர் பிரதமரானபோது உங்களைப் போன்று அவரும் மக்களவை உறுப்பினராக இல்லை. அதன் பின்பு லாலுவின் தயவால் பாட்னாவில் வேட்பாளராக நின்று அவர் வெற்றி பெற்றார். நீங்கள் ஒரேயொருமுறை 1999-ல் தெற்கு டெல்லியில் நாடாளுமன்ற வேட்பாளராக நின்று தோற்றீர்கள். அவ்வளவுதான். இன்றுவரை தேர்தல் களத்தில் மக்களை நீங்கள் சந்தித்ததே இல்லை. சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த குமாரசாமி ராஜா 1952-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையத்தில் தோற்ற அடுத்த நிமிடம் பதவியைத் துறந்தார். இடைக்கால முதல்வராக அவர் தொடர வேண்டும் என்று பிரதமர் நேரு வற்புறுத்தினார். 'ஒரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாத நான் ஒரு மாநில முதல்வராக நீடிப்பது நியாயமாகாதுஎன்று நேருவுக்குக் கடிதம் எழுதினார் ராஜா. 'பொதுவாழ்வில் நேர்மை’(Probity in Public life) அன்றைய அரசியல்வாதிகளின் தாரகமந்திரமாக இருந்தது. ராஜாவின் அளவுகோலால் உங்களை அளக்கக்கூடுமா?

மாண்புமிகு பிரதமரே... உங்களை நிதியமைச்சராக்கிய நரசிம்ம ராவ் ஆட்சியில் அரங்கேறிய ஊழல்கள் ஒன்றா, இரண்டா? அனைத்துக்கும் மௌனசாட்சியாக இருந்து அன்று நீங்கள் எடுத்த பயிற்சி வீண்போகவில்லை. உங்கள் 10 ஆண்டு ஆட்சியில் அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல், பாதுகாப்புத்துறையில் ஊழல், ரயில்வே ஊழல் என்று அன்றாடம் ஊழல் அரக்கனுக்கு உற்சவம் நடந்த நிலையில் மௌனகுரு சுவாமிகளாக நீங்கள் பார்த்துக்கொண்டிருந்ததற்குப் பழைய பயிற்சிதான் பயன்பட்டிருக்கிறது. அன்று நரசிம்ம ராவின் மகன், இன்று சோனியாவின் மருமகன். பாதை ஒன்று; மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பவர் ஒருவர். ஊழல் பயணியர் மட்டும் வேறுவேறு. நாட்டு நலனில் நாட்டமுள்ளவர் நீங்கள் என்று எப்படி நம்புவது?

நரசிம்ம ராவை அவரது இல்லத்தில் சந்தித்து ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக ஹர்ஷத் மேத்தா பகிரங்கமாக அறிவித்தபோது அவர் வாய்திறக்கவில்லை. 'அலைக்கற்றை விவகாரத்தில் பிரதமர் அனுமதியுடன்தான் செயல்பட்டேன்என்று ஆண்டிமுத்து ராசா திரும்பத் திரும்ப வாக்குமூலம் வழங்கியபோதும் நீங்கள் வாய் திறக்கவில்லை. சிறுபான்மை அரசைக் காப்பாற்றிக் கொள்ள நரசிம்ம ராவ் எம்.பி-க்களுக்கு லஞ்சம் தந்ததாக அன்று பேசப்பட்டது. அதே குற்றச்சாட்டு உங்கள் ஆட்சியிலும் உங்களுக்கு எதிராக வீசப்பட்டது. உங்கள் அரசியல் குருநாதர் பதவியிழந்த பின்பு நீதிமன்றப் படிகளில் ஏறியிறங்க நேர்ந்தது. உங்களுக்கு அந்த அவமானம் வரக் கூடாது என்று ஆண்டவனை வேண்டுகிறேன். ஏவியவரை விட்டுவிட்டு ஏவப்பட்ட அம்பை ஏசக் கூடாது.

மரியாதைக்குரிய பிரதமர் பரிதாபத்துக்கு உரியவராக மாறியது யாரால் என்ற கேள்வி இன்று வரை உங்களுக்குள் எழவே இல்லையா? நேர்மை பேசும் நீங்கள் லாலு போன்றவர்களின் பதவிப் பறிப்பைத் தடுப்பதற்காக அவசர சட்டமியற்ற முனைந்தபோது, இளவரசர் ராகுல் உங்களைத் தரம்தாழ்ந்து வெளிப்படையாக விமர்சித்தபோதே உங்கள் கம்பீரம் கலைந்துவிட்டது. நாட்டு விடுதலைக்காக 3262 நாட்கள் சிறையில் தவமிருந்த நேரு, ஊழல் நிழல்படாத உத்தமர் என்பதில் இருகருத்து யாருக்கும் இருக்கவியலாது. ஆனால், ஜீப் ஊழல் கிருஷ்ணமேனனையும், முந்த்ரா ஊழல் கிருஷ்ணமாச்சாரியையும், பஞ்சாப் முதல்வர் ஊழல் நாயகர் கெய்ரோனையும் காப்பாற்ற அவர் முனைந்ததை மறுக்கவும் முடியாது. நேருவின் அளப்பரிய தியாகம் அவரைக் காப்பாற்றியது. கறைபடிந்த உங்கள் ஆட்சியின் களங்கத்தில் இருந்து உங்களை எது காப்பாற்றக் கூடும்?

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, 'உலகத்தின் பிரச்னைகளும், இந்தியாவின் சிக்கல்களுக்கும் சோஷலிசம் ஒன்றுதான் தீர்வு. சோஷலிசம் பாதையில் பயணிப்பதன் மூலமே வறுமையை ஒழிக்க முடியும்; வேலையின்மையைப் போக்க முடியும்; மக்களின் சீரழிவைத் தடுக்க முடியும்என்று (ஜூலை 1948) மும்பையில் முழங்கினார். ஆனால், பணக்காரர்களைப் பெரும் பணக்காரர்களாகவும், ஏழைகளைப் பரம ஏழைகளாகவும் மாற்றும் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு நீங்கள்தான் நரசிம்ம ராவ் ஆட்சியில் வரவேற்பு ராகம் வாசித்தீர்கள். வீழ்ச்சியுற்றிருந்த பொருளாதாரம் முதலில் எழுச்சியுற்றது போன்று மாயத்தோற்றம் காட்டியது உண்மைதான். ஆனால், இன்றைய நிலை என்ன?

உங்கள் ஆட்சிச் சாதனைகளில் முக்கியமானது உணவுப் பாதுகாப்புச் சட்டம். நாட்டில் 80 கோடி மக்களின் பசியாற்றுவதற்கு இந்த அற்புதமான திட்டம் வழிவகுத்திருக்கிறது என்று பெருமிதம் பொங்கப் பேசியிருக்கிறீர்கள். 120 கோடி இந்திய மக்களில் 2 ரூபாய்க்கு கோதுமையும், 3 ரூபாய்க்கு அரிசியும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் மலிவு விலையில் வழங்கினால்தான் 80 கோடி மக்கள் பசியாற முடியும் என்றால், உங்கள் புதிய பொருளாதாரம் எதைச் சாதித்தது? உங்கள் நம்பிக்கைக்குரிய 'வியத்தகு பொருளாதார விற்பன்னர்அலுவாலியா வறுமைக்கோட்டுக்குக் கீழே வாடுபவர்களின் எண்ணிக்கை



உங்கள் புத்தாண்டு ஆட்சியில் 41 கோடியில் இருந்து 27 கோடியாகக் குறைந்துவிட்டது என்கிறார். அவருடைய அளவீட்டின்படி ஒவ்வொரு நாளும் நகரத்தில் உள்ளவர் 33 ரூபாயும், கிராமப்புறங்களில் வாழ்பவர் 27 ரூபாயும் செலவழிக்கும் சக்தியுள்ளவர் எனில், அவர் வறுமைக்கோட்டுக்கு மேலே வந்துவிடுகிறார். உங்களுக்கும் சிதம்பரத்துக்கும், அலுவாலியாவுக்கும் வறுமை என்றால் என்னவென்று தெரியுமா? பசியின் கொடுமை எப்படியிருக்கும் என்று புரியுமா?

அன்பிற்கினிய பிரதமரே... உங்கள் ஆட்சியில் நல்ல காரியங்களே நடக்கவில்லை என்று சாதிக்க முயல்வது என் நோக்கம் அன்று. கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் (அதில் ஊழல் ஊடுருவியிருந்தாலும்) தகவல் அறியும் உரிமைச் சட்டம்,  போன்ற உயர்கல்வி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 27 சதவிகித ஒதுக்கீடு, கல்வி உரிமைச் சட்டம் போன்றவை உண்மையில் பாராட்டுக்கு உரியவை. ஆனால், நான்கு நற்செயல்களுக்காக நாலாயிரம் தீச்செயல்களை யாரால் சகிக்கக் கூடும்?

ஒரு பொம்மைப் பிரதமராக இருந்து உங்கள் பெருமையை இழந்துவிட்டீர்கள். சோனியாவின் குடும்பம் போற்றி மதிக்கும் சொத்தாக இருந்த நீங்கள் இன்று காங்கிரஸின் சுமையாகக் கருதப்படுவதால் விடைபெறும் நிலைக்கு வீழ்ந்துவிட்டீர்கள். அதிகாரம் முழுவதும் சோனியா வீட்டில்; பழிபாவம் முழுவதும் பரிதாபத்துக்குரிய உங்கள் தோள்களில்,  மக்கள் செல்வாக்கு இல்லாதவர்கள் அடுத்தவர் தயவில் அதிகார நாற்காலியில் நீண்ட நாட்கள் அமர முடியாது. அப்படியே அமர்ந்தாலும் சுயமரியாதையுடன் சுயேச்சையாகவும், சுதந்திரமாகவும் நினைத்தபடி ஆட்சி நிர்வாகத்தை நடத்திவிட முடியாது என்பதை இப்போதாவது நீங்கள் உணர்கின்றீர்களா?


நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் தாசரி நாராயண ராவ் உங்கள் பக்கம் கை நீட்டுகிறார். அலைக்கற்றை ஊழலில் ஆ.ராசா உங்கள் கரங்களில் கறை பூச முயல்கிறார். 'வாழ்ந்தபோது வாழ்த்துவதற்கு வரிசையில் நின்றவர்கள் வீழ்ந்தபோது விலகிச் செல்வது அரசியல் உலகில் மிகச் சாதாரண நடைமுறை. கவலைப்படாதீர்கள் பிரதமரே... அரசனாய் இருந்த சித்தார்த்தன் கானகம் சென்றால் அது துறவு. எதையும் துறக்காமல் எல்லாவற்றையும் அடைந்த நீங்கள், இன்று இழக்கக் கூடாத தனிமனித மரியாதையைத் துறந்துவிட்டுப் பிரதமர் பொறுப்பில் இருந்து விலகுவதுதான் உங்கள் நன்றிக்கடனுக்கான நல்லடையாளம். 'போய்விடுங்கள்என்று சொல்லத்தான் ஆசை. ஆனாலும், மங்கல வழக்காகப் 'போய்வாருங்கள்என்று சொல்கிறேன்.

உங்கள் அறிவின் மீது வியப்பும்

பதவிப் பசியின் மீது

வருத்தமும் கொண்ட

தமிழருவி மணியன்

No comments:

Post a Comment