இந்தியப் பொருளாதாரத்தில் திடீரென்று ஏற்பட்டுள்ள சரிவை மீட்டெடுக்க, மத்திய அரசு சில சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. திட்டம் சாரா செலவினங்களை 10% குறைத்துக்கொள்ள வேண்டும் என்பது எல்லா துறைகளுக்கும் நிதியமைச்சகம் வழங்கியுள்ள அறிவுறுத்தல் சிக்கன நடவடிக்கைகளின் முதல்கட்டமாகும்.
புதிய நியமனங்கள் நிறுத்தி வைக்கப்படும். வாகனங்கள் வாங்குவது தவிர்க்கப்படும். திட்டங்களின் மறுமதிப்பீட்டுக்கு அனுமதி கிடையாது. கருத்தரங்குகள், கண்காட்சிகள் ஆகியவற்றை ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் நடத்தும் போக்குகளுக்குத் தடை. அத்துடன், அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என சிக்கன நடவடிக்கைகளுக்கான பட்டியல் விரிந்துகொண்டே போகின்றது.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் சிக்கன நடவடிக்கைகளால் பெரிய நன்மை விளைந்துவிடுமா என்றால், அப்படியொன்றும் சொல்லிவிட முடியாது. 2011-12 ஆம் ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 5.7% ஆக இருப்பது இதன் மூலம் 5.1% ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது, அவ்வளவே!
சென்ற நிதியாண்டின் இறுதியில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 8.4% ஆக இருந்தது. 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்கு 9% பொருளாதார வளர்ச்சியை எட்டுவதுதான். ஆகவே, இந்த இலக்கை அடைந்துவிடுவோம் என்றுதான் எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இப்படி 6.7% ஆக சரியும் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை. குறிப்பாக, நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் மொத்த உற்பத்தி (ஜிடிபி) 5.3% ஆக எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைவாக இருந்ததுதான், தற்போதைய சிக்கன நடவடிக்கை அறிவிப்புக்கு முக்கிய காரணம்.
2008 ஆம் ஆண்டு மேலை நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோதும்கூட ஸ்திர நிலையில் இருந்த பொருளாதார வளர்ச்சி, இப்போது ஏன் இப்படி ஒரு சரிவைச் சந்திக்கிறது என்பதுதான் எல்லாரையும் யோசிக்க வைத்திருக்கிறது. இந்தச் சரிவுக்கு ரூபாயின் மதிப்பு மிகவும் குறைந்து போனதும், முதலீடுகள் குறைந்து போனதும் இரண்டு குறிப்பிடத்தக்க காரணங்கள்.
பொருளாதார வல்லுநர்களைப் பொருத்தவரை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவதற்கு மிக முக்கியமான காரணம், கூட்டணி அரசியல் சுமை என்று குற்றம் சாட்டுகிறார்கள். கூட்டணிக் கட்சிகளைத் தங்கள் விருப்பத்துக்குக் கட்டி இழுப்பதற்குப் பதிலாக அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் திட்டங்களை மாற்றிக்கொண்டு, எதையும் முழுமையாகச் செய்ய முடியாத நிலைமைதான் இந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்காமல் தேக்க நிலை ஏற்பட்டதற்குக் காரணம் என்பது அவர்களது வாதம்.
இத்தோடு, வருமானம் வரும் வழி குறுகிப்போன நிலையில், அரசுக்கு மிகப்பெரிய வருவாய் வரும் வழிகளையெல்லாம் குறைந்த விலைக்குத் தனியாருக்குத் தாரை வார்ப்பதன் மூலம் தனக்குத்தானே இழப்பை ஏற்படுத்திக்கொள்ளும் போக்கு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அதிகமாக இருப்பதும் ஒரு காரணம்.
உதாரணமாக, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம், நிலக்கரிச் சுரங்க வயல்களைக் குறைந்த விலைக்குக் குத்தகை விட்டது, கனிமச் சுரங்கங்களில் அரசியல்வாதிகளை விருப்பம்போலச் சம்பாதிக்க அனுமதித்தது போன்ற நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம்.
2ஜிஅலைக்கற்றை, நிலக்கரி மற்றும் கனிம வளங்கள் போன்ற அரசுக்கு வருவாய் பெற்றுத் தரும் தேசச் சொத்துகளைச் சரியான முறையில் விலை நிர்ணயம் செய்திருந்தாலே போதும் இந்திய அரசுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும். கூட்டணி நிர்பந்தம் என்கிற பெயரில் அமைச்சர்கள் செய்யும் ஊழல்களைக் கண்டும்காணாமல் இருந்ததால் இந்திய அரசுக்குப் பெரிய அளவில் பொருளிழப்பு ஏற்பட்டது உண்மை. அதற்குக் கூட்டணிக் கட்சிகளை மட்டுமே பொறுப்பேற்கச் சொல்வது சரியாகப்படவில்லை.
ரூபாய் மதிப்புக் குறையும்போதெல்லாம் அதைச் சரி செய்ய அன்னிய முதலீட்டை அனுமதிப்பது மட்டுமே ஒரே வழி என்று மத்திய அரசு கருதுகிறது. சில தினங்களுக்கு முன்பு சுமார் ரூ.3,000 கோடி அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் துறை உள்பட பல்வேறு துறைகளிலும் அன்னிய நேரடி முதலீட்டுக்கு வாசலைத் திறந்துவிட்டுள்ளனர். வரைமுறையோ கட்டுப்பாடோ இல்லாமல், அன்னிய முதலீடுகளை அனுமதித்துத் தாற்காலிகமாக நிலைமையைச் சமாளிப்பதன் பின்னணியைப் பற்றி அரசு யோசிப்பதாகவே தெரியவில்லை.
பிரதமரிலிருந்து தொடங்கி அரை டஜன் பொருளாதார நிபுணர்கள் அமைச்சரவையில் அங்கம் வகித்தும் சரியான திட்டமிடல் இல்லாததுதான் இந்தச் சரிவுக்குக் காரணம் என்பதை அரசு புரிந்துகொள்ளவே மறுக்கிறது.
சரியான பொருளாதார வளர்ச்சி என்பது - தொழில் பெருகுவதன் மூலம் அனைவருக்கும் வேலைவாய்ப்பு, அதனால் அனைத்துக் குடும்பங்களுக்கும் வாங்கும்திறன் அதிகரித்தல், சம்பாதித்த பொருளை அவர்கள் மகிழ்ச்சியுடன் செலவழிப்பதால் அதிகரிக்கும் வணிகம், வணிகத் தேவையால் மேலும் தொழில் வளர்ச்சி என்ற சுழற்சி முறையில் அமைய வேண்டும். அன்னிய நேரடி முதலீடு வந்து குவிந்தால் இந்தியாவில் பணப்புழக்கம் அதிகமான போதிலும் இருப்பவர்-இல்லாதவர், வாங்கும்சக்தி உள்ளவர்- இல்லாதவர் ஆகியோருக்கான இடைவெளிதான் அதிகரித்துக்கொண்டே போகுமே தவிர, அது பொருளாதார வளர்ச்சிக்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியாது.
இந்த இடைவெளியோடு நமது அரசியல்வாதிகளின் ஊழல் பணத்தின் நடமாட்டமும் சேர்ந்து மேலும் ஊறு செய்கிறது என்பது இன்னொரு அவலம்.
அன்னிய முதலீடுகளை அவர்கள் திரும்ப எடுக்கச் செய்துவிட்டால் இந்தியா திவாலாகிவிடும். இல்லையென்றால், வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாமல் அவர்களுக்கு அடிமையாகிவிடும். எதுவாகயிருந்தாலும் அது நல்லதற்கல்ல.
கூட்டணிக் கட்சிகளைக் காரணம் காட்டித் தனது இயலாமையை அரசு நியாயப்படுத்த முடியாது. சிக்கன நடவடிக்கை என்பது வெறும் கண்துடைப்பு மட்டுமே. பிரச்னைக்குத் தீர்வு காண வழி தெரியாமல் அரசு தத்தளிக்கிறது என்பதுதான் உண்மை.
நன்றி-தினமணி தலையங்கம்.